அமலாக்கத் துறை இயக்குநருக்கு செப்.15 வரை பணி நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்று செப்டம்பர் 15 வரை பதவியில் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை…

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்று செப்டம்பர் 15 வரை பதவியில் நீட்டிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிபிஐ மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியமைத்து மத்திய அரசு கடந்தாண்டு அவசர சட்டம் இயற்றியது. இதனால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணிக்காலத்தை 2023ம் ஆண்டு நவம்பர் 18 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமலாக்கத் துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் 3.30 மணிக்கு மேல் நீதிபதிகள் பி.ஆர் கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்ற நிலையில், இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறையில் எஸ்.கே. மிஸ்ராவைத் தவிர மற்ற அனைத்து அதிகாரிகளும் தகுதியற்றவர்களா? எஸ்.கே. மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லை என்றால், ஒட்டுமொத்த அமலாக்கத் துறையும் செயல்பட முடியாதா? என்று மத்திய அரசுக்கு காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தது.

மேலும், எஸ்.கே. மிஸ்ராவின் பணிக்காலத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, அதன் பிறகு அவரது பணிக் காலத்தை நீட்டிப்பது தொடர்பான எந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது என்று உத்தரவிட்டுள்ளது.

முன்னதற்காக அமலாக்கத்துறை இயக்குநரின் பணி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு 3-வது முறை பணி நீட்டிப்பு வழங்கியது சட்டவிரோதமானது என கூறி பணி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்ததோடு, இந்த மாதம் இறுதிவரை பணியில் தொடர்வார் என்றும், 15 நாட்களில் அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநரை பணி நியமனம் செய்யவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.