தெலங்கானா மாநிலத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாநிலங்களான மகாராஷ்டிரம், உ.பி., ம.பி., ஹிமாசல், உத்தரகண்ட், வடக்கு ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் தெலங்கானா மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லட்சுமி தேவி பட்டையில் 65 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. மேலும் ஜெயசங்கர் மாவட்டம் சித்தியாலில் 62 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்பூர் மண்டலம் சேல்பூரில் 48 செ.மீ., ரெகோண்டாவில் 47 செ.மீ. மழை பொழிந்துள்ளது. எனவே, தெலங்கானா மாநிலத்தின் 20 இடங்களில் தலா 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று, இன்று கனமழை பெய்ததால் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா மாநிலம் முழுவதும் இடைவிடாத மழை மாற்றம் வெள்ளம் காரணமாக மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.







