பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார். அவருக்கு வயது 86. இவரது இயற்பெயர் ரங்கநாதன். புதுக்கோட்டையில் 1938-ம் ஆண்டு ஆகஸ்டு 28ம் தேதி டி.வெங்கோப…

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற பிரபல ஓவியர் மாருதி காலமானார். அவருக்கு வயது 86. இவரது இயற்பெயர் ரங்கநாதன்.

புதுக்கோட்டையில் 1938-ம் ஆண்டு ஆகஸ்டு 28ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் ரங்கநாதன். புதுக்கோட்டையில் 10ம் வகுப்பு வரை படித்தார். அவரது தந்தை ஆசிரியராக இருந்ததால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு ரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர்ந்த ரங்கநாதன், ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டார். தொடர்ந்து திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் சென்னைக்கு நகர்ந்த இவர் மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம், பெயர் எழுதும் பணியில் சேர்ந்தார்.

இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுபாஷினி, சுஹாசினி என இரு மகள்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் வேலையையும் நாளிதழ்களில் அட்டைப்படங்கள் வரையும் வேலையையும் ஒரே நேரத்தில் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரச்னைகளால், இவர் மாருதி என்ற புனைப்பெயர் மூலம் வரையத் தொடங்கினார்.

இவர் உளியின் ஓசை, பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்துள்ளார்.

இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 86 வயதான இவர் புனை நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்தார். ஓவியர் மாருதி உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.