முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

அர்ச்சகர்களும் தமிழ்நாடும்.. வரலாறு கூறுவது என்ன??


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் சமம். எனினும் பல்வேறு தொழில்களில் அனைவரும் ஈடுபடாது, தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினர் அல்லது பாலினத்தவர் மட்டுமே செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் மதங்கள் பல இருப்பினும் அதன் மத குருமார்கள் எப்போதும் குறிப்பிட்ட சமூகத்தினராகவோ ஆண்களாகவோ மட்டுமே இருப்பதே நடைமுறையாக இருந்து வருகிறது. இதில் இந்து மதம் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்திலும் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை சார்ந்த ஆண்களே அர்ச்சகராக இருந்து வரும் நிலை உள்ளது. இந்த போக்கை எதிர்த்து அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்ற குரல்கள் பல காலமாக எழுந்து வந்தன.

1969ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு நபர் கமிஷனாக ‘இளையபெருமாள் கமிட்டி’ அப்போதைய மத்திய அரசால் அமைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இளையபெருமாள், முதுபெரும் தலித் சமூக தலைவராவார். ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட இளையபெருமாள் கமிட்டியில், பாரம்பரியமாக அர்ச்சகர் நியமனம் செய்யப்படும் முறையை ஒழித்து கல்வி, பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் ஒன்று. பின், 1970ஆம் ஆண்டு பெரியார், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை அறிவித்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று 1970ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்டத்தை தமிழக சட்டசபையில் கொண்டு வந்தார். இந்த அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து மொத்தம் 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சேஷம்மாள் என்பவரும் ஒருவர். ஆகையால் இவ்வழக்கு இந்திய நீதித்துறையில் சேஷம்மாள் vs தமிழக அரசு என்ற வழக்காக நிலைபெற்றது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் 1972ம் ஆண்டு மார்ச் 14ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. எனினும் குழப்பமான அந்த தீர்ப்பினால் இதனால் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக முடியாத நிலை உருவானது.இதனைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு வேத ஆகம கல்லூரிகளை திறப்பதாவும் சமூக நீதி அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, 2002ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர் அர்ச்சககராக நியமிக்கப்பட்டார். நீதித்துறை வரலாற்றில் ஆதித்யன் வழக்கு என்று நிலை பெற்ற இவ்வழக்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் தீர்ப்பை அளித்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 2006ம் ஆண்டு தமிழக அரசு, அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்கும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து 1972ம் ஆண்டு சேசம்மாள் வழக்கில் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு தொடர்ந்து உடனே இடைக்கால தடை வாங்கினர்.இது குறித்து 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று தீர்ப்பளிக்கவில்லை. மாறாக அரசாணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோரின் மனுக்களைத்தான் தள்ளுபடி செய்துள்ளது. ஆகையால் 2006ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயிர் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதாவது அனைத்து ஜாதியினரையும் அரசால் அர்ச்சகராக நியமிக்க முடியும் என்ற முடிவு. இருப்பினும் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியும். ஆனால் “ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்கள்” நியமன முறை இருக்க வேண்டும். அப்படி பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள், நியமனம் செய்யப்படுகிற போது தங்களுடைய உரிமை பாதிக்கப்படும் என அர்ச்சகர்கள் கருதினால் கீழ்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது சற்று குழப்பமான தீர்ப்பாகவே மக்கள் மத்தியில் கருதப்பட்டது.

எனினும், இதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி தள்ளாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராகப் சைவ – வைணவ ஆகம பயிற்சி நிலையங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாரிச்சாமி முதல் மாற்று சாதியினரை சேர்ந்த அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.

எனினும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பிற சமூக இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கோயில் அர்ச்சகர்களாக பணியமர்த்தப்படாத நிலை இருந்தது. மாணவர்கள் தங்களை பணியமர்த்தக்கோரி பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்த நிலையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினருக்கும் பணி நியமனம் என்று திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் கூறியது பெரும் வரவேற்பை பெற்றது. அறிக்கையோடு நிறுத்திவிடாமல் திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தபின் கடந்த ஜூன் 7 ஆம் தேதி “100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வேலைகள் செயல்படுத்தப்படும்” என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது சிலரிடம் எதிர்ப்பையும் பலரிடம் வரவேற்பையும் பெற்றது.

மேலும், ஜூன் 12ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, திருக்கோயில்களில் கூடிய விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்படும் என்றும், பெண்கள் எவர் விரும்பினாலும் முறையான பயிற்சிப் பெற்று அவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறினார். இது பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று அரசினை வலியுறுத்தி வந்த பலரும் ஆண் அர்ச்சகர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு வந்தனரே அன்றி பெண் அர்ச்சகர்கள் குறித்து சிலர் மட்டுமே குரலெழுப்பி வந்தனர். மேலும், அர்ச்சகர் பயிற்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களில் அனைவரும் ஆண்களே தவிர ஒருவர் கூட இதர பாலினத்தவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் நுழைவுப் போராட்டத்தில் தொடங்கி, தமிழகம் கலாச்சாரப் போராட்டங்கள் பல கண்டபோதிலும் ஆகமக் கோயில்களில் பெண் அர்ச்சகர்கள் நியமனம் என்பது இதுவரை பேசாப் பொருள்தான். வேத நூல்கள் உட்பட இந்து மத அடிப்படை நூல்களில் பெண்கள் அர்ச்சகர்களாகக் கூடாது என்னும் வரிகள் காணப்படவில்லை. புராதன வேத காலங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேதம் பயின்றுள்ளனர். எனினும், பெண்கள் மட்டுமே அத்தனை பூஜைகளையும் செய்யும் ஒரு கோயில் இருக்குமாயின் அது சென்னையிலிருந்து 50 மைல் தொலைவில் 1970-களில் கட்டி எழுப்பப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆகும்.

புனிதம், தீட்டு போன்ற படிப்பினைகள் அங்கு இல்லை. மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வாகக் கருதுவதால் எந்நேரமும் இந்தக் கோயிலுக்குள் பெண்கள் பிரவேசிக்கின்றனர்.அதேபோல கிராமப்புறங்களைச் சேர்ந்த அம்மன் கோயில்களில் பெண் பூசாரிகள் காண்பது சகஜம். இருப்பினும், அங்கும் ஆண்கள் பெண்களின் இடத்தைப் பிடித்துக்கொள்வது உண்டு. யாகம் நடத்துபவருக்கும் புரோகிதருக்கும் இடையே ஒரு சம்பிரதாயம் உண்டு. யாகம் நடத்துபவர் புரோகிதர் கையில் கங்கணம் கட்ட வேண்டும். அந்த வகையில் ஒரு ஆண் ஒரு பெண் கையில் கங்கணம் கட்ட வேண்டும் என்றால், இருவரும் தம்பதியினராக இருக்க வேண்டும். அடுத்து, யாகம் முடிந்ததும் நடத்துபவர் புரோகிதருக்குச் சம்பாவனை கொடுக்க வேண்டும். அப்படியிருக்க ஒரு பெண் புரோகிதர் சம்பாவனை பெற்றுக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடாகக் கருதப்படும். ரிக் வேத காலத்தில் 30-க்கும் அதிகமான பெண் வேத பண்டிதர்கள் வாழ்ந்தனர் என்கிறது வரலாறு. ஆனால், இன்று ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் பெண்களுக்கு இடமில்லை.

பூஜைகள் சடங்குகளில் பெண்களுக்கான முக்கிய இடத்தை மறுப்பதில் பிற மதங்களும் விதிவிலக்கல்ல. மசூதிகளில் இமாம் பொறுப்பேற்றுப்பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தும் உரிமைகோரி போராடும் இஸ்லாமியப் பெண்களும் உள்ளனர்.தொழுகைக்கும் பெண்களை உள்ளே அனுமதிக்காதமசூதிகளும் உள்ளன. “நான், வக்ஃபு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ஒரு இஸ்லாமிய நிறுவனத்தைஎப்படி ஒரு பெண் நிர்வாகம் செய்யலாம் எனும் எதிர்ப்புக்குரல் மாநிலம் முழுவதும் எதிரொலித்தது” என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பதர் சையத். இதேபோல கத்தோலிக்க தேவாலயமும் பெண் பாதிரியார் பதவிக்கு அங்கீகாரம் தர நெடுங்காலமாக மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

சமத்துவம் என்பது சாதி, மத, பாலினங்களை கடந்த மனிதம் மட்டுமே. அது அனைத்திலும் பின்பற்றுதல் வேண்டும். இன்று பெண்கள் கேட்கும் உரிமைகள் நாளை மூன்றாம் பாலினத்தவர்க்கும் கிடைக்கும் பட்சத்தில் “எல்லாரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாத நிலை” வரும் ஏற்றதாழ்வு இல்லா நாளே மனிதம் சமத்துவம் போற்றும் நாளாய் அமையும்.

Advertisement:

Related posts

டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

Halley karthi

வெளியானது PUBG-ன் 2.0 “Battleground”

Saravana Kumar

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Ezhilarasan