டெல்டா மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களை செயல்படுத்த ஏலம் விடுவதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள் ளார். இதில், காவிரிப் படுகை பகுதியில் உள்ள புதுக்கோட்டை வடதெரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள் ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், காவிரிப் படுகை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கை என தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஏலத்தில் இருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டும் என்றும் எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் விவசாய மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இணை காப்பதுபோல் தங்கள் அரசு காக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.







