அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அதிமுகவின் இரண்டாம் கட்ட வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ.2,000-மாக உயர்த்தப்படும்.
சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யப்படும்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டின் போது படுகாயமடைந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும்.ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.
சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.







