“நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

பெண் பிள்ளைகளை, உணவுக்காக தெருவில் அமர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளிய ஆளும் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக அரசு மளிகைப் பொருட்கள் வழங்காததால், முறையான உணவு கிடைப்பதில்லை எனக் கூறி அவ்விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளி மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை வயிறார உண்ண வேண்டிய பதின்ம வயது பெண் பிள்ளைகளை, உணவுக்காக இப்படித் தெருவில் அமர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளிய ஆளும் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். “இலவச உணவு வழங்குகிறோம்” என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் சுயமரியாதையை நார் நாராகக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் அறிவாலயம் அரசுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது.

தமிழக அரசு மாணவர் விடுதிகளை “சமூகநீதி விடுதிகள்” எனத் திமுக அரசு பெயர் மாற்றம் செய்தபோதே, விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் இப்படியொரு தேர்தல் நாடகம் எதற்கு எனக் கடுமையான கண்டனங்களை நாம் தெரிவித்திருந்தோம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏதோவொரு கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு, பின்பு அதை அப்படியே கிடப்பில் போட்டு மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கும் இந்த மக்கள் விரோத அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.