பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
’ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 19 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர், தமிழில், மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு சுவரங்களுக்குள், ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி, இசை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
https://twitter.com/rajbhavan_tn/status/1621853892312174594
இந்நிலையில், இன்று வாணி ஜெயராம், தனது சொந்த வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், இசை உலகில் வாணி ஜெயராமின் பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தியதாக கூறியுள்ளார். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது தாம் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்ததாகவும், அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் உலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இசையுலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1621806828903628801
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராம் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்ததாக கூறியுள்ளார். இந்தியாவின் இதய கமலமாக பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட வாணி ஜெயராம் வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/TTVDhinakaran/status/1621800842843283456
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் பாடி சிறப்பு சேர்த்தவர் வாணி ஜெயராம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தினகரன் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1621845969179639809
திமுக எம்பி கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில், வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ள எம்பி கனிமொழி, இந்திய இசை உலகிற்கு அவரது மறைவு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.







