திருப்பத்தூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார். அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்டநெரிசலில் சிக்கி வள்ளியம்மாள், ராஜாத்தி, நாகம்மாள் மற்றும் மல்லிகா ஆகிய நான்கு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று பெண்கள் காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.







