ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் – CPIB விசாரணை!

சிங்கப்பூா் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஈஸ்வரனை ஜூலை 11-ஆம் தேதி அன்று அந்த நாட்டு அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுதலை செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.…

சிங்கப்பூா் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஈஸ்வரனை ஜூலை 11-ஆம் தேதி அன்று அந்த நாட்டு அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது செய்து பின்னர், ஜாமீனில் விடுதலை செய்ததாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இவரின் தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஈஸ்வரன். இவர்மீது ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து,
கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று அதாவது ஜூலை 11-ஆம் தேதி அன்று அந்த நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வுக்குழுவான CPIB சிங்கப்பூரின் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை கைது செய்தது.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ஈஸ்வரனை கைது செய்த அன்றே சிங்கப்பூரின் மற்றும் ஒரு பெரும் தொழிலதிபரான ஓங் பெங் செங்கும் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் கைதுசெய்யப்பட்ட அன்றே சிபிஐபி அதிகாரிகளால் ஜாமீனும் வழங்கி, விடுவிக்கப்பட்டனர். ஒரே தினத்தில் இரு பெரும் முக்கிய பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டது சிங்கப்பூர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரதமர் லீ சியென் லூங், எஸ்.ஈஸ்வரனை, கடந்த வார இறுதியில் விடுப்பில் செல்லக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நிகழ்வு சிங்கப்பூர் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது குறித்து ஊழல் விசாரணை அமைப்பின் (சிபிஐபி) செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அமைச்சா் ஈஸ்வரனை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதே வழக்கில் தொழிலதிபா் ஓங் பெங் செங்கும் கைது செய்யப்பட்டாா். இருவரும் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா். அவா்களது பாஸ்போா்ட்கள் முடக்கப்பட்டுள்ளன. எனினும், முன் அனுமதி பெற்று அவா்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். இந்த வழக்கு விசாரணை நிலையில் உள்ளதால் இது குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் அரசியலில் இருந்து வரும் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த ஈஸ்வரன், கடந்த 2006-ஆம் ஆண்டில் முதல்முறையாக அமைச்சரவையில் சோ்க்கப்பட்டாா். கடந்த 2021-இல் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவா், வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகப் பொறுப்பையும் கவனித்து வருகிறாா்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.