ஓமலூர் நகராட்சி பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சியில் மன்னர்கள் கால நாணயங்கள், ஆங்கிலேயர் அரசின் நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
சேலம் , ஓமலூரை அடுத்த பாரக்கல்லூர் பகுதியில் நகராட்சி நடு நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் வளையக்காரனூர் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி சிறப்பு நாணய கண்காட்சியை இங்கு நடத்தினார்.
இதில், 50 மன்னர்கள் காலத்தில் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள், 80 நாடுகளின் கரன்சி, நாணயம், ஆங்கிலேய அரசின் நாணயங்கள், சுதந்திரத்திற்கு பிறகு வந்த நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல காமராஜரின் திட்டங்கள் குறித்த புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி நாட்டு தபால் தலைகள், இந்திய நாட்டின் தபால் தலைகள் வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் உருவம் பொறித்த நாணயம், மைசூர் யானை நாணயம் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இந்த நாணயங்களை பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து பார்த்து வெங்கடாசலமிடம் விளக்கம் பெற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு பள்ளி மாணவர்களாக வந்து நாணய கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழங்கால நாணயம் முதல் தற்போதைய நாணயம் வரை பார்த்து சென்றனர்.
கண்காட்சி நடத்தும் இவர் 1-ம் வகுப்பு மட்டும் படித்துள்ளார். இவர் தனியார் நூல் மில்லில் வேலை செய்து கொண்டே நாணய கண்காட்சி நடத்தி வருகிறார். இவர் இதுவரை 170 கண்காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியுள்ளார். தொடர்ந்து பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். தொடர்ந்து கண்காட்சி நடத்தி மாணவர்களுக்கு வரலாறு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஸ்ரீ.மரகதம்








