அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன என்பதை பார்ப்போம்….
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்த்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு குறித்து முதலமைச்சருக்கு ஆளுநர் 5 பக்க அளவில் எழுதிய கடிதம் வெளியாகியது. அதில் அரசியலமைப்பு சட்டத்தின் ஆர்ட்டிக்கிள் 154, 163 மற்றும் 164 ஆகிய பிரிவுகள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, சட்டப்பிரிவு 154-ன் படி, சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றவர் ஆளுநர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விவகாரங்களில் தேவைப்பட்டால் ஆளுநரே முடிவு எடுக்கலாம் என்று சட்டப்பிரிவு 163-ல் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றும், ஆளுநரின் விருப்பத்தின் பேரிலேயே ஒருவர் அமைச்சர் பொறுப்பை வகிக்க முடியும் என்றும் சட்டப்பிரிவு 164-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








