மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை வடக்கு தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்
பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




