கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் மைதேயி சமூக மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் வெடித்துள்ளது. 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். தொடரும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தி இரு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு அவர் சென்ற போது பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து அவர் இம்பால் திரும்பினார்.






