“இயக்குநர் பாக்யராஜ் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு” – சீமான்!

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகுந்த அதிர்ச்சியையும், உருக்கமான இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த பாக்யராஜ்க்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி பாக்யராஜ் அவர்கள் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.

ஆகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தானப் படைப்பாளி மதிப்பிற்குரிய பாக்யராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அம்மா பூர்ணிமா, தம்பி சாந்தனு, தங்கை சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும், திரைத்துரையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

என்னுடைய அப்பா பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, திரைமொழி பயின்று, ‘திரைக்கதை மன்னன்’ எனப் புகழாரம் சூட்டுமளவுக்கு திரைக்கதை வடிவமைப்பிலும், படைப்பு ஆக்கத்திலும் சிறந்துவிளங்கி, அத்துறையில் ஒரு பேராசிரியராகத் திகழ்ந்தவர் பாக்யராஜ் அவர்கள். அவர் இயக்குநராக மக்கள் விரும்பும் தரமானப் படைப்புகளைக் கொடுத்ததோடு மட்டுமல்லாது, நடிப்பில் கதாநாயகனாகவும் வெற்றிவாகை சூடி, பலருக்கு கதையின் நாயகனாக நடிக்கலாம் எனும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்தவராவார். பல நடிகர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி, கலையுலகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்குத் திரையுலக வாழ்வுதந்தவராவார்.

சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்ன வீடு, தாவணிக் கனவுகள், தூறல் நின்னுப்போச்சு, சுந்தர காண்டம், ராசுக்குட்டி எனக் காலத்தால் அழியாது, மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பற்பல படைப்புகளைத் தந்த பெருந்தகை பாக்யராஜ் அவர்கள். சீரான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்புகள், உயிரோட்டமான வசனங்கள், மிகையில்லாத நடிப்பு எனும் இலக்கணத்தோடு மாறுபாட்ட படைப்புகளைத் தந்து, தமிழ்த்திரையுலகை வேறு ஒரு கோணத்திற்கு நகர்த்தி, கலையுலகுக்கு அவர் ஆற்றிய அரியப் பங்களிப்பினை எவ்வளவு போற்றினாலும் தகும். இத்தோடு, எம்.ஜி.ஆர். அவர்களால் ‘கலையுலக வாரிசு’ என அறிவிக்கப்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் பாக்யராஜ் அவர்கள் மட்டும்தான். அவரது மறைவானது தமிழ்த்திரையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். நம்மைவிட்டு அவர் மறைந்தாலும், மகத்தானப் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். பாக்யராஜ் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.