தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தன்னை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் விருதுநகர் எம்.பியுமான மாணிக்கம் தாகூரை மாநில தலைவராக நியமித்து கங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.




