எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் சோதனையில் 1000-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அவரது சகோதரர் அசோக் வீட்டிலும், அசோக்கின் நண்பர்கள் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
குதிரைப்படை, காலர் படை, கப்பற்படை ஆகிய மூன்று படைகளும் எப்படி போர்க்களத்தில் போரை சந்திக்குமோ, அதேபோல தான் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை என்கின்ற மூன்று படைகளை மத்திய அரசை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கின்ற மோடி, தனது கையில் வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி விடலாம் என்று கனவு காணுகிறார்.
நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய அச்சத்தை, பயத்தை, நடுக்கத்தை, பாஜகவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவினர் தாங்கள் கற்ற வித்தை அத்தனையும் கர்நாடகாவில் காட்டினார்கள். இதுவரை மோடி எந்த தேர்தல் பிரச்சாரத்திற்கும் இ துபோல் பிரச்சாரம் செய்யவில்லை.ஒரு நகராட்சி கவுன்சிலர் ஓட்டு கேட்பது போல இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மோடி 27 கிலோமீட்டர் ரோட் ஷோ நடத்தினார்.
ராமர் பெயரை சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி பிடித்தது போல அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்து விடலாம் என நினைத்தார்கள். கர்நாடகா தேர்தலில் பாஜகவை சார்ந்தவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளைத்தான் பயன்படுத்தினார்கள்.
கர்நாடக தேர்தலில் பாஜகவினர் நடத்திய அத்தனை நாடகத்திற்கு பிறகும், அந்த மாநில மக்கள் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே கர்நாடகத்தில் முதல் விக்கெட் விழுந்திருக்கிறது என்று நான் கூறியிருந்தேன். 2024 இல் நடைபெறும் பைனல் மேட்சில் மேன் ஆப் மேட்சாக எங்கள் தலைவர் தான் இருப்பார் என்று கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கூறியுள்ளேன். எனவே கர்நாடக மாநில தேர்தல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தோல்வியை மறைக்கத்தான் 2000 நோட்டு விவகாரத்தை மோடி அரசு கையில் எடுத்துள்ளது போலும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 23ஆம் தேதி சிங்கப்பூர் ஜப்பான் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டிற்கு முதலீடாளர்களை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறார். தொடர்ந்து இரண்டு நாட்களாக அனைத்து பத்திரிகைகளிலும் இந்த செய்தி மட்டுமே வெளியிட்டு வரும் நிலையில், அதை திசை திருப்பும் நோக்கில் தான், எதையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத பாஜக அரசு இந்த வருமானவரி சோதனையை செய்து வருகிறது. வருமானவரித்துறை சோதனை என்றால் என்ன என்று தெரியாத நேரத்திலேயே அதை சந்தித்தவர்கள் நாங்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அண்ணாமலை குறி வைக்க காரணம், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் கணிசமாக திமுக வெற்றி பெற்றது தான். மேலும் அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜியை குறிவைத்து சோதனை நடத்துகிறார்கள். எமர்ஜென்சியை பார்த்த திமுகவினர் இதைப் பார்த்து அஞ்சப்பட்டோம். கடந்த ஆட்சி காலத்தில் விஜயபாஸ்கர் இல்லத்தில் சோதனை நடத்தும்போது ஆட்சியில் இருப்போர் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவை சார்ந்தவர்கள் வருமான வரி சோதனை நடத்தும் இடத்தில் பிரச்சனை செய்வதாக எனக்கு தெரிந்தவுடன் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவை சேர்ந்தவர்கள் யாரும் அங்கு இருக்கக்கூடாது என்று தெரிவித்தேன். தொண்டர்களும் அதனை கேட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பலப்பட்டுள்ளது. அதனை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற சோதனையை செய்து வருகிறார்கள். வருமான வரி சோதனையை வைத்து பழிவாங்கும் எண்ணத்தை மத்திய அரசு செய்து வருகிறது. திட்டமிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் இது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள். காவல்துறை பாதுகாப்பு உதவி இல்லாமல் நள்ளிரவில் திடீரென்று சோதனை செய்வது மிகவும் தவறு. வருமான வரித்துறை வாகனத்தை சேதம் அடைய செய்தது தப்புதான். அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.









