புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்.…

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அதன் திறப்பு விழா வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கு  கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பின் 79-ம் பிரிவின் கீழ் நாடாளுமன்ற அவைகளை கூட்டுவதற்கும், ரத்து செய்வதற்கும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சரவை மற்றும் பிரதமர் ஆகியோர் குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள். எனவே நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு, இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கும், அதன் நிகழ்வுகளை தொடங்கி வைப்பதற்கும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.