வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன் – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன்  என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்…

வருமான வரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்வேன்  என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூரில் உள்ள வீடு உட்பட 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

senthil balajiகரூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சரின் நண்பர்கள், சகோதரர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களிலும் சோதனையும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடைபெறுவதால் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் அமைச்சரின் வீட்டருகே குவிந்தவண்ணம் உள்ளனர்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரபட்டியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 500க்கும் மேற்பட்டவர்கள் வருமானத் துறையினர் முற்றுகையிட்டதால பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது..

” காலை தொடங்கி  சகோதரர், உறவினர், நண்பர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது. சில ஊடகங்களில் வெளியானது போல எனது இல்லத்தில் சோதனை நடைபெறவில்லை, நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

சோதனைகளை எதிர்கொள்வது  புதிது அல்ல. தேர்தல் நேரத்தில் சோதனை என்ற பெயரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தடை செய்ய முயற்சி செய்தார்கள். இந்த சோதனை சிறப்பு என்னவெனில்  வருமான வரி செலுத்தக்கூடியவர்களின்  இடங்களில் சோதனை நடைபெற்றதுதான்.

சோதனை நடைபெற்றபோது பொதுமக்கள் சோதனை நடைபெற்ற இடங்களில் ஒன்று கூடினர். இது தொடர்பாக உடனடியாக கரூரில் தொடர்பு கொண்டு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கூறியவுடன், அவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

எவ்வளவு நாட்கள் நடைபெற்றாலும் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார்கள். எதிர் கொள்ள எனது நண்பர்கள், உறவினர்கள் தயாராக உள்ளனர். முழு சோதனை நிறைவடைந்த பின் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். அதிகாலை நேரம் சோதனைக்கு செல்கிறவர்கள் கதவை திறப்பதற்கு முன்னாலேயே வீட்டினுள் சென்றுள்ளனர்.

எனக்கு தெரிந்தவரை 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடப்பதாக கூறியிருக்கிறார்கள். வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 2006க்குப் பிறகு என் பெயரில் ஒரு சொத்து விற்றிருக்கிறேன். 2006க்குப் பிறகு ஒரு சதுர அடி கூட வாங்கவில்லை. என் தம்பியின் மாமியார், அவரது மகள்களுக்கு தானமாக கொடுத்தார். அவர் தானமாக கொடுத்ததுதான் தம்பி மனைவி வீடு கட்டும் இடம். ” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.