மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்பதே சரியானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எழுவர் விடுதலை தொடர்பாக முதலமைச்சரிடம் வலியுறுத்திய தாகத் தெரிவித்தார். மாநிலங்களின் ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசு என்பதே சரியானது எனவும் அரசியல் அமைப்பு சட்டமும் அவ்வாறே கூறுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முதலமைச்சராக பதவியேற்ற உடனேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டது, தமிழர்களை தாங்கி பிடிப்பது போல உள்ளது எனக் கூறினார். எழுவர் விடுதலையில் தான் உறுதியாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.







