முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

தமிழ்நாட்டு தொழில்துறை வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பு!


ரா.தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சியில், ஏற்றமிகு இடத்தில் நிலைபெற்றுள்ளது, இந்த வளர்ச்சிக்கு ஐந்து முறை முதலமைச்சராக கருணாநிதி ஆற்றிய பங்கு அளப்பரியது என்கின்றனர் தொழில்துறை வல்லுநர்கள். இதுதொடர்பான செய்தி தொகுப்பை பார்க்கலாம்..

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கம், அரேபியா, ரோம், ஐரோப்பா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு செல்வ செழிப்போடு திகழ்ந்தது தமிழ்நாடு. முகலாய படையெடுப்புகளும், ஐரோப்பிய காலனி ஆதிக்க ஆட்சியும் தமிழ்நாட்டை ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நடை போடவைத்தது. 1947 ஆம் ஆண்டு விடுதலைக்கு பின், வளர்ச்சி பாதையை நோக்கி மெதுவாக பயணிக்க ஆரம்பித்தது தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்த போது தொழில் துறையிலும் ஏற்றம் கண்டது. இந்திய பிரதமர் நேரு அரசு அமல்படுத்திய முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டு திட்டங்களின் விளைவாக பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை, திருச்சி பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, உதகமண்டலம் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், டெலி பிரிண்டர்ஸ், சேலம் இரும்பு உருக்கு ஆலை, சென்னை உர தொழிற்சாலை, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், என பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகின.

வைகை அணை மின் திட்டம் ,மேட்டூர் அணை மின் திட்டம் மற்றும் பல அணைகளை கட்டி நீர் மின் திட்டங்கள், வட சென்னை, தூத்துக்குடி அனல் மின் திட்டங்கள் மற்றும் டிவிஎஸ், முருகப்பா, சேசசாயி, ராம்கோ, சங்கர் சிமெண்ட் , லட்சுமி மில்ஸ், ஏபிடி, சிம்சன் என தனியார் நிறுவனங்களின் வழியேயும் தமிழ்நாடு தொழில் துறையில் பலமான, பரந்த அடித்தளத்துடன் கட்டமைக்கப்பட்டன.

1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்தது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். தொழில் துறை வளர்ச்சியில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. பொதுப்பணி அமைச்சராக இருந்த மு.கருணாநிதி தனியாரிடமிருந்த பேருந்து போக்குவரத்தை தேசியமயமாக்கினார். அண்ணாவின் மறைவையடுத்து முதலமைச்சரான கருணாநிதி தொழில் துறை வளர்ச்சியில் மேலும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். பல தனியார் நிறுவனங்களை தொழில் தொடங்க ஊக்கப்படுத்தினார். தொழில் வளர்ச்சிக்கும் முதலீடுகளுக்கும் ஏற்ற அமைதியான சூழலை வளர்த்தெடுத்தது திமுக அரசு .

காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றவரும், இந்திய ஒன்றிய அரசில் இடம் பெற்றவருமான மூத்த காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் ஒரு முறை கூறும் போது , தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் காமராஜர் பார்வையும் ,கருணாநிதி பார்வையும் ஒன்றே என்று என குறிப்பிட்டார்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக, தொழில்கள் நடைபெறுகின்ற இடங்களில் காமராஜர் தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். மேலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகளையும் ஏற்படுத்தினார்.. இதையே கருணாநிதியும் கடைபிடித்தார். தமிழகத்தின் ஒவ்வொரு 50-வது கிலோ மீட்டரிலும் ஒரு தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு திமுக அரசு செயல்பட்ட காலகட்டம் அது. சென்னை முதல் நாகர்கோவில் வரையில் பல தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மானிய விலையில் இடம், தடையில்லா மின்சாரம், விரைவான தொழில் ஒப்புதல் போன்றவற்றால் தொழில் முனைவோர் பெருகினர்.

டெல்லியுடனான உறவை மாநிலத்துக்குத் திட்டங்களைக் கொண்டுவரும் உறவாக வளர்த்தெடுத்தவர் கருணாநிதி. கிடப்பில் இருந்த சேலம் உருக்காலை, அனல் மின் நிலையங்களின் விரிவாக்கம், போன்ற திட்டங்களை துரிதப்படுத்தினார். தூத்துக்குடி ஸ்பிக், மதுரை தமிழ்நாடு கெமிக்கல்ஸ், காரைக்குடி டிசிஎல், என புதிய நிறுவங்களை கொண்டு வந்தார். மத்திய அரசின் பொதுத் துறை மாதிரி, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களையும் உருவாக்கினார்.

அதாவது பூம்புகார் கப்பல் நிறுவனம், டான்ஸி நிறுவனம் , தமிழ்நாடு அக்ரோ இன்டஸ்ட்ரி ஆகியவை இதில் அடங்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பே, கருணாநிதி ஆட்சியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய (PPP) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அரசின் தொழில் சார் கொள்கைகளால், ஜவுளி, தீப்பெட்டி, சிறு இயந்திரங்கள் என பல்வேறு சிறுதொழில் நிறுவனங்களும் உருவாகின . இந்த வெற்றிப்பாதையே எம்ஜிஆர் காலத்தில் ஒசூரில் அரசு தனியார் கூட்டுறவுடன் டைட்டான் கடிகாரம், அசோக் லேலண்ட், கரூர் தமிழ்நாடு காதித ஆலை , ஜெயலலிதா காலத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் , தொழிற்பேட்டைகளில் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், என பரந்து விரிந்து ,மேலும் வலு சேர்த்தன.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கென , நாட்டிலேயே முதல் முறையாக 1997-ல் கொள்கையை அறிவித்தார் கருணாநிதி. இதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே மத்திய அரசு தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டது. ஒருபுறம் ‘டைடல் பார்க்’ நிறுவனங்களை இங்கு ஈர்த்தது, மறுபுறம் வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களைத் தயாராக்கும் வகையில் உயர் கல்வித் துறையையும் முடுக்கிவிட்டார் கருணாநிதி. உலகத் தமிழ் இணைய மாநாட்டை 1999-ல் நடத்தியது இன்னொரு முக்கியமான செயல்பாடு. இன்று இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க பல வகைகளில் விதை போட்ட நிகழ்வு அது.

மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்தி, இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்த அரசுகளை வியப்பில் ஆழ்த்தினார் மு.கருணாநிதி என்றால் மிகையில்லை..

Advertisement:

Related posts

கால்வாயில் சிக்கிய கப்பலால் கதிகலங்கும் உலக நாடுகள்!

Gayathri Venkatesan

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!

நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது- ராதாகிருஷ்ணன்!

Jayapriya