திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி விவசாயிகள் செய்திருந்தனர். இந்நிலையில் மேட்டூரில் இருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும் கடைமடை பகுதிக்கு போதிய அளவு தண்ணீர் வந்து சேராததால் குறுவை பயிர்கள் கருகி சேதம் அடைந்தன. இதனால் கருகிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர் .
மேலும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், சம்பா சாகுபடி செய்தாவது வாங்கிய கடன்களை அடைத்து விடலாம் என நம்பி சாகுபடி செய்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் நுணாக்காடு, ரகுநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்களும், தற்போது தண்ணீர் இன்றி கருகி வருகின்றது.
இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். தினந்தோறும் பார்த்து பார்த்து வளர்த்த இந்த பயிர்கள் தற்போது கருகியதை கண்டு விவசாயிகள் கண்ணீர்
விடுகின்றனர். உடனடியாக அதிக அளவு தண்ணீர் திறந்தால் மட்டுமே மிஞ்சி இருக்கும் சம்பா பயிராவது காப்பாற்றலாம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ரூபி.காமராஜ்







