பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய திட்டம் 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க 100 கோடி ரூபாயில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் தொழில் தொடங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில், பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார். இந்தத் திட்டம் வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







