தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில,
2022-ம் ஆண்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் இளையோருக்கான உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் வரை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்புற நடத்தப்பட்டதைப் பாராட்டும் விதமாக, இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் விளையாட்டு விருதை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் வென்றெடுத்துள்ளது. விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் எனும் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போதை பொருள்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தூதுவர்களாக 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து நிதி வழங்காத நிலையிலும் ஆசிரியர், அரசு ஊழியர் நலனை காத்து வருகிறோம். ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பணியில் இருப்பவர் விபத்தில் உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.1 கோடி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு, 2021-22-ம் நிதி ஆண்டில் 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26 ஆம் நிதியாண்டில் 1433 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ், 35.33 லட்சம் நபர்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும், இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 5463 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ.1000 கோடியில் அயோத்திதாசர் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி, ரூ.44 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட 29 லட்சம் மாணவர்களுக்கு ரூ.1,317 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் புனரமைப்புக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. 84 கோவில்களில் ரூ.425 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குச் சொந்தமான 8111 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







