தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில,
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,71,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 29,000 வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, ஒசூரில் ரூ. 1,070 கோடி மதிப்பில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய 7 நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நியோ டைடல் பூங்காக்கள் ரூ. 388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலமாக 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 திட்டத்தில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ. 2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அரசுப் பணியாளர்களில் 22 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான பணத்தை பெறுவார்கள். கடைசி மாத சம்பளத்தில் 50 % மாத ஓய்வூதியம் வழங்கப்படும். இடைக்கால பட்ஜெட்டில், இந்த திட்டத்தை செயல்படுத்த அரசின் கூடுதல் பங்களிப்புக்காக ஓட்டுமொத்தமாக ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக 4,000 கோடி ரூபாய், மாணவர்கள் பேருந்துப் பயணக் கட்டணம் திட்டத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக ரூ.1857 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டில் 1057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ. 327 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ. 229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 2,15,39,333 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் ரூ.69,087 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.







