2034-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கபில்சிபல் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில்சிபல், 2034 மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், இது வரவிருக்கும் மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்ததா என்பது சந்தேகமாக உள்ளது. உண்மையான அக்கறை இருந்திருந்தால், இதை 2014ம் ஆண்டிலேயே நிறைவேற்றி இருக்கலாம் என்று அவர் கூறினார்.
இந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நிச்சயமாக, “2029 மக்களவைத் தேர்தலுக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வராது. ஏன் என்றால், கடைசியாக 1976 இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது 84 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தொகுதி எல்லை நிர்ணயத்தை முடக்குவோம் என்று கூறியது. 2026 ஆம் ஆண்டுக்கு பின்னர் எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரையறை செய்யப்படம் வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
2026 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடங்கினால், அதை முடிப்பதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிடும். அது மட்டுமல்ல, வட மாநிலங்களில் பெரும் பகுதியினரின் சாதி வாரியான விவரங்களை அதில் சேர்க்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கையை பாஜக நிராகரித்தால், வட மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவும். எனவே, கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சாதி விவரங்களை சேர்த்தால், அதற்கு இன்னும் கால தாமதமாகும் என்று கூறினார். எனவே, மகளிர் இட ஒதுக்கீடானது 2034 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் சாத்தியமாகும்.