கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பெங்களூரில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளது.
மேலும், வரும் 29-ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நாளை கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சம்மேளன தலைவர் தனராஜ், வடமாநிலங்களுக்கு சென்று திரும்பும் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாடு லாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.