புதுச்சேரி புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கட்சியை பலப்படுத்துதல், கூட்டணிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணியை உறுதி செய்துள்ள பாஜக அக்கட்சிக்கு 4 மக்களவை தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். நாகாலாந்து மாநில புதிய பாஜக தலைவராக பெஞ்சமின் யெப்தோமியும், மேகாலயா மாநில புதிய பாஜக தலைவராக ரிக்மன் மோமினையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் பதவி வகித்து வந்தார். அவருக்கு பதிலாக புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கல்வியாளரான செல்வகணபதி, இதற்கு முன்பு புதுவை நியமன எம்.எல்.ஏ-வாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் புதுச்சேரி பாஜக பொருளாளராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.







