மியான்மார் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு வேலை என்றுகூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட 15க்கும் மேற்பட்ட தமிழர்கள் மியான்மார் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பாஜக ஆட்சியில் கடந்த 8 ஆண்டு காலத்தில் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்லும் அவலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பன்மடங்காகப் பெருகியுள்ளதாக சீமான் தமது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
இடைத்தரர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தைச் செலுத்தி, வேலை கிடைக்காத்தால் போதும் என்ற எண்ணத்தில் செல்லும் இளைஞர்கள் ஏமாற்றப்படும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக அரங்கேறுவதாக கூறியுள்ள சீமான், குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வெளிநாடு வேலைகளுக்கு செல்லும் தமிழர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் தொடந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி, போலி முகவர்களை கைது செய்து அவர்களது முகமைகளை முடக்கவோ, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டவோ, உள்நாட்டிலேயே போதிய வேலை வாய்ப்பினை உருவாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் அலட்சிய போக்கே வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்வதற்கு முக்கிய காரணமாகும் என்றும் சீமான் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம்வெளிநாடு வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இடைத்தரகர்கள், வேலைவாய்ப்பு முகமைகளின் நம்பத்தன்மை, வெளிநாட்டு நிறுவனங்களின் தகவல்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போலி நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை செய்யவும் சிறப்பு தகவல் மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.








