நீட் தேர்வு அச்சம் – விபரீத முடிவெடுத்த மாணவி..!

சேலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை நீட் நுழைவு தேர்வு நடத்துகிறது. இந்நிலையில் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

மறுதேர்வு அறிவிக்கப்பட்டதில் இருந்து ராஜஸ்தான், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் கோவையை சேர்ந்த 4 மாணவர்கள் தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நீட் தேர்வு குறித்து கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம், எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர்-புவனேஸ்வரி ஆகியோரின் இளைய மகள் கோபிகா நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மே மாதம் நடைபெற்ற இந்த ஆண்டுகான நீட் தேர்வு எழுதினார். இந்நிலையில் வினாத்தாள் கசிந்ததை அடுத்து இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.

நீட் மறுதேர்வு நாளை மறுநாள் (ஜூன் 21) நடைபெற உள்ள நிலையில் இத்தேர்விற்கு தயாராகி வந்த மாணவி கோபிகா தோல்வி அச்சத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.