சட்டப்பேரவை நேரலைத் துண்டிப்பு – தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அறிவித்த நிலையில், தற்போது சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நேரலை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

‘மாற்றத்திற்கான ஆட்சி’ என்று கூறிவிட்டு, கடந்தகால திமுக ஆட்சியைப் போலவே தங்களுக்குச் சாதகமான மற்றும் தேவையான பகுதிகளை மட்டுமே நேரலை செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் வாதங்களையோ அல்லது தங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துகளையோ நேரலை செய்யாமல் தவிர்ப்பது ஏமாற்றமளிக்கிறது.

சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் மக்கள் நலன் சார்ந்த கேள்விகளையும், விவாதங்களையும் நேரடியாகக் காணும் உரிமை தமிழக மக்களுக்கு உள்ளது. அதனைத் தடுப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. எனவே, அரசியல் காரணங்களுக்காக நேரலையைத் துண்டிக்கும் அல்லது தணிக்கை செய்யும் போக்கைக் கைவிட்டு, சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தையும் எவ்விதத் தடையுமின்றி முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசையும், பேரவைத் தலைவர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.