நடிகர் ராமராஜன் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சாமானியன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் ராமராஜன். பல வெற்றி திரைப்படங்களை தந்த இவர் கடைசியாக 2012 ம் ஆண்டு வெளியான மேதை திரைப்படத்தில் நடித்திருந்தார். சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ராமராஜன் தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.
அவர் கதாநாயகனாக நடித்துள்ள சாமானியன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ராமராஜன், ராதாரவி,எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய ராஹேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். ராமராஜன் நடிக்கும் 45வது திரைப்படமான சாமானியன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், ராமராஜன், ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர், முல்லை, சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனது வழக்கமான பாணியில் இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ராமராஜன் நடித்திருப்பது போல் டீசர் காட்சிகள் காணப்படுகின்றன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ராமராஜன் நடிப்பில் வெளியாக உள்ள சாமானியன் படத்தின் வெளியீட்டிற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அ.மாரித்தங்கம்







