ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும்: வங்கதேசம்

ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ரோஹிங்கியா தீவிரவாத குழுக்கள் சண்டையிட்டன. இதையடுத்து ராணுவம் ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக…

ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ரோஹிங்கியா தீவிரவாத குழுக்கள் சண்டையிட்டன.

இதையடுத்து ராணுவம் ரோஹிங்கியாக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மியான்மரில் இருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறினர்.

அவர்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தங்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வங்கதேச அரசு முயன்று வருகிறது. எனினும், அவர்களை ஏற்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது.

காக்ஸ் பஜார் முகாமில் தங்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், விலங்குகளைப் போல் வாழ்ந்து வருவதாகவும் ரோஹிங்கியாக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், ரோஹிங்கியாக்கள் வசிக்கும் காக்ஸ் பஜார் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிச்செல்லி பாசெலெட், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, தலைநகர் டாக்காவில் அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்தார்.

அப்போது, ரோஹிங்கியாக்களை மியான்மர் திரும்பப்பெற ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிச்செல்லி பாசெலெட்டிடம் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். அவர்களை தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.