நடிகை பவுலின் ஜெசிகா தனது உயிரை மாய்த்து கொண்டது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதும், காதல் தோல்வி என்பதும் தெரியவந்துள்ளது.
அண்மையில் வெளியான “வாய்தா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் 29 வயதான பவுலின் ஜெசிகா. ஆந்திரா மாநிலம் சதிவேடு பகுதியை சேர்ந்தவரான இவர், சென்னையில் உள்ள விருகம்பாத்தில் வசித்துவந்தார். திரைப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து தனியாக தங்கி சினிமா வாய்ப்பு தேடிவந்தார்.
நடிகர் விஷாலின் “துப்பறிவாளன்”, விஷ்ணு விஷாலின் “ராட்சசன்” உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். டிக் டாக் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு புகழ்பெற்ற இவர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர் பட்டாளங்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென தனது உயிரை மாய்த்து கொண்டார். இது தொடர்பான விசாரணையில், அவரது அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றும், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பவுலின் யாரை காதலித்தார், எதற்காக இந்த முடிவை எடுத்தார் என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்பு மனித குலத்திற்கு எதிரானது என நியூஸ் 7 தமிழ் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எந்த சூழ்நிலையிலும் யாரும் உயிரிழப்பு எண்ணத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.




