காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்றிரவு டெல்லியில் இருந்து சண்டிகருக்கு லாரி ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, சமீபகாலமாகவே அவ்வப்போது மக்களைச் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கூட பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழக பேருந்தில் பயணம் செய்து கல்லூரி மாணவர்கள், பெண்களிடம் உரையாடியது, உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி ஊழியர்களின் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை கேட்டு தெரிந்துகொண்டது , எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென டெல்லி பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்களுடன் உரையாடியது போன்ற செயல்களைச் செய்தது பலரது மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு லாரியில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை நீடித்தது. லாரி ஓட்டுநர்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை கேட்டபடி, அவர் பயணம் செய்துள்ளார். நாடு முழுவதும் 90 லட்சம் லாரி ஓட்டுநர்கள் உள்ளதாகவும், அவர்களின் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்காக ராகுல்காந்தி லாரியில் பயணித்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியினர் பலரும் ராகுல் காந்தி லாரியில் பயணம் செய்யும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.
https://twitter.com/INCIndia/status/1660855030059089921?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








