நடப்பாண்டில் மூடப்படும் 500 மதுபானக்கடைகள்; தகுதியான கடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் -கருணாநிதி பிறந்தநாளில் வெளியாகுமா அறிவிப்பு?

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவித அறிவிப்புமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த 96 மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பாண்டில் 500…

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எந்தவித அறிவிப்புமின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த 96 மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி நடப்பாண்டில் 500 கடைகள் மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி மூடப்பட வேண்டிய 500 மதுபானக்கடைகளின் கணக்கெடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி 500 மதுபானக்கடைகள் மூடப்படுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு ?

டாஸ்மாக் நிர்வாகம் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.44,098.56 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் 2021 -2022 ஆம் ஆண்டு வருவாயான ரூ. 36,050.65 கோடியை விட 8,047.91 கோடி அதிகமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2003 – 2004 ஆம் ஆண்டில் 3639 கோடியாக இருந்த வருவாய் படிப்படியாக உயர்ந்து நடப்பாண்டில் ரூ.44,098.56 கோடியாக உள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் எனவும் பார்க்கப்படுகிறது.

மதுபானக் கடைகளை குறைக்கும் அரசு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 – 2024 கொள்கை விளக்க குறிப்பின்படி 5329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன . 6648 மேற்பார்வையாளர்கள், 14,794 விற்பனையாளர்கள், 2876 உதவி விற்பனையாளர்கள் என மொத்தமாக 24,318 பணியாளர்கள் டாஸ்மாக்கில் பணியாற்றி வருகின்றனர். அதில் மூடுவதற்கு தகுதியான 500 கடைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மூடுவதற்கான அறிவிப்பு ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட 8 நாட்கள் மதுவிற்பனை இல்லாத நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கவும், களப்பணி நடத்தவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இது தவிர்த்து அனுமதியின்றி நடத்தப்படும் மதுபான பார்களும் அதிரடியாக மூடி சீல் வைக்கப்படும் நடவடிக்கைகள் தொடந்து நடைபெற்று வருகின்றன.

கள்ளச்சாராயத்தை தடுக்க…

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட விஷ சாராயத்தை அருந்தி 23 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் அளித்திருக்கிறார். இருப்பினும் அரசு சார்பாக மதுபானக்கடைகள் இருந்தும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது எப்படி என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்காக அமைக்கப்பட்ட மதுவிலக்கு அமலக்கப்பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ஒரு லட்சத்து 39 ஆயிரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் எதிர்க்கட்சிகள் …

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதியின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அதிமுக, பாஜக , பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடந்து வலியுறுத்தி வருகின்றன. அரசை தாண்டி ஆளுநரிடமும் எதிர்க்கட்சி தலைவர்கள் புகார்களை வழங்கி கொண்டிருக்கின்றனர். கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை வலுவடையச் செய்துள்ளது. தொடர் குற்றச்சாட்டுகளை தவிர்க்க நடப்பாண்டில் 500 மதுபானக்கடைகளை மூட அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள், புனித தளங்களுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. கடைகள் மூடப்படுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 3 ஆம் தேதி வெளியிடுவார் என்ற தகவலும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன.

மதுபானம் மூலமாக வரும் வருவாயை வைத்தே அரசு இயந்திரம் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அமைச்சர் செந்தில்பாலாஜி முற்றிலுமாக மறுத்திருக்கிறார். டாஸ்மாக் மூலமாக கணிசமாக வருவாய் வருகிறது என்றாலும் அவற்றை மட்டுமே நம்பி அரசாங்கம் இல்லை என்பதற்கு பல விளக்கங்களையும் அவர் அளித்திருக்கிறார். 500 கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு வருவாய் குறையும் என்பதை தாண்டி அந்த கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அதனை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டியதும் அமைச்சர் மற்றும் அரசின் கடமையாகவும் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.