பிசிசிஐ இன் பசுமை விழிப்புணர்வாக, நடப்பு ஆண்டு பிளே ஆப் சுற்றுகளில் போடப்படும் டாட் பால்கள் ஒவ்வொன்றிற்கும், 500 மரங்கள் நடப்படவுள்ளன.
நேற்று நடைபெற்ற போட்டியில் டாட் பால் வந்தபோதெல்லாம் மரம் காண்பிக்கப்பட்டது. இது எதற்காக என்று பலரும் குழப்பமான சூழ்நிலையில் இருந்ததை அடுத்து இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிளே ஆப் சுற்று நேற்று தொடங்கியது. முதலாவது தகுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தப் போட்டியில் பவுலர்கள் வீசிய ஒவ்வொரு டாட் பாலுக்கும் டிவி ஸ்கோர் கார்டில் புள்ளிக்குப் பதிலாக மரக்கன்று அடையாளம் காட்டப்பட்டது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
நேற்றைய போட்டியில் பந்து வீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு டாட்பாலுக்கும் 500 மரங்கள் நடுவதற்கு டாடா மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை முயற்சியாக பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் இந்தியா முழுவதும் 500 மரங்களை நடும் பெரிய முயற்சியை பிசிசிஐ எடுத்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசனை டாடா நிறுவனம் வழங்கி வரும் நிலையில் டாடா மற்றும் பிசிசிஐ ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து இந்த மரங்களை நட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று 34 டாட் பால்கள் வீசப்பட்ட நிலையில் 17 ஆயிரம் மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







