சென்னை சென்ட்ரல் – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும், தாம்பரம் – செங்கோட்டை இடையே வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கும் அவர், பின், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையங்களை திறந்து வைக்க உள்ளார். இதற்கான விழா பரங்கிமலை ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ளது.
மேலும் இந்த விழாவில், திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கிலோ மீட்டர் தூரத்திலான அகலப்பாதையையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதனை தொடர்ந்து மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி 8 ஆம் தேதி இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் நேரம் கேட்டு வருகின்றனர்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த நான்கு மாதங்களில் இது மோடியின் 8-வது கர்நாடக பயணம் ஆகும். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவது குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சென்னை கமிஷனர் ஆகியோர் பங்கேற்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








