மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் அமைந்துள்ள பழம்பெரும் மடக்கோயில்களில் ஒன்றான தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபத்தை கண்டு ரசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் சோழ மன்னரில் ஒருவரும்,அறுபத்து நாயன்மார்களில் முக்கியமானவருமான கோச்செங்கட் சோழ நாயன்மாரினால் கட்டப்பட்ட தாந்தோன்றிஸ்வர் மடக்கோவில் அமைந்துள்ளது.இங்குள்ள உற்சவர் இயற்கையாகவே தோன்றியதால் தாந்தோன்றீஸ்வர் என்றழைக்கப்படுகிறார்.மேலும் இக்கோயிலானது தேவாரப்பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது.சிறப்புலி நாயன்மார் பிறந்து,வாழ்ந்து முக்தியடைந்த தலமாகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் 24வது ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 22ம் தேதி சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் ஹோமங்கள்,ஆன்மிகவாதிகளின் சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கியமான நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தாயார் ஸ்ரீ வால்நெடுங்கண்ணி அம்மன் பச்சை பட்டுடனும்,உற்சவர் தாந்தோன்றீஸ்வர் வென்பட்டும் உடுத்தபட்டு திரு ஆபரணங்களுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் ஊர்வலமாக சுமந்து வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து புனிதநீர் கடம் வைக்கப்பட்டு,பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.16 வகையான தீபாரதனைகள் உள்ளடங்கிய மாகதீபாரதனை காட்டப்பட்டது.விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.திருக்கல்யாணத்தை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
—வேந்தன்







