வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தரப்பிரதேச மாநிலம்…

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் இந்த முறை மீண்டும் போட்டியிடுகிறார். இதனையடுத்து இன்று வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று (மே 13) வாராணசிக்கு வந்தார். தொடர்ந்து, அங்கு பிரமாண்ட வாகன பேரணி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, கங்கை ஆற்றங்கரையில் உள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்னர் காசி கோட்வால் பாபா காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.

தனையடுத்து, பாஜக தொண்டர்களோடு, மாபெரும் பேரணியாக தேர்தல் அலுவலகம் சென்ற பிரதமர் மோடி, வாரணாசி மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தபோது உடன் இருந்தனர்.

வாரணாசி தொகுதியில் கடைசிகட்டமாக ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த 2019 தேர்தலில் 63.62% வாக்குக்களும், 2014 மக்களவை தேர்தலில் 56.37% வாக்குகளும் பெற்று வாரணாசியில் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.