குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24,2022 அன்று நிறைவுபெறும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புதிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் செவிவழிச் செய்தியாகப் பரவி வருகின்றன.
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளரை தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏன்?
இந்தியா முழுவதும் எளிதாக காலூன்றி இருக்கும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அவ்வளவு எளிதாக காலூன்ற முடியவில்லை. அதற்கு காரணம் திராவிட இயக்கங்கள் பரப்பி இருக்கும் கொள்கைகள் பாஜகவை தடுக்கும் அரணாக இருந்து வருகிறது. இந்த சிக்கலை பாஜக தலைவர்களும் அறிந்துவைத்துள்ளனர். தமிழ்நாட்டிற்குள் விரைவாக காலூன்றி 2024 மக்களவைத் தேர்தலில் ஓரளவு தங்கள் வாக்கு வங்கியினை உயர்த்திக் கொள்ளவும், திமுக கூட்டணிக்கு நெருக்கடி தருவதற்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.
அது மட்டுமல்ல காரணம்!
2017ம் ஆண்டு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக நிறுத்தியபோது பாஜக 21 மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருந்தது. மக்களவையிலும் தனிப்பெரும்பான்மையாக உறுப்பினர்களைக் கொண்டு இருந்தது. அந்நிலை இப்போதைய 2022 குடியரசுத் தலைவர் தேர்தலில் இல்லை. தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 17 மாநிலங்கள் மற்றும் ஓர் ஒன்றிய பிரதேசத்தில் மட்டுமே ஆட்சி செய்கின்றன.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிப் பெற்று இருந்தாலும், உத்திர பிரதேசத்தில் கடந்த முறை வெற்றி பெற்றதை விட இம்முறை பா.ஜ.க கூட்டணி 48 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறது. உத்தராகண்ட் மாநில தேர்தலில் 56லிருந்து 47 சட்டமன்ற உறுப்பினர்களாகவும், கோவாவில் 28 லிருந்து 20 சட்டமன்ற உறுப்பினர்களாகவும் குறைந்திருக்கிறது. பாஜக கூட்டணியின் இந்த வெற்றி குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பயனளிக்காத வெற்றி. தோல்விகரமான வெற்றி எனச் சொல்லலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது வேட்பாளரை முன்னிறுத்தலாம்
இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கி, அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக கூட்டணி அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து பொது வேட்பாளரை முன்மொழிந்தால் அவ்வேட்பாளர் குடியரசுத் தலைவராகும் வாய்ப்புகளும் இருக்கிறது.
ஏனெனில் தற்போதைய நிலையின்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 48.8 விழுக்காடு மட்டுமே வாக்கு மதிப்புகள் இருக்கின்றது. மீதம் 51.2 விழுக்காடு வாக்கு மதிப்பு மற்ற கட்சியினரிடம் இருக்கிறது. ஆகவே, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே ஒரு முன்னோட்டம் பார்ப்பதற்காக பொது வேட்பாளரை அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழியலாம். இச்சிக்கலை எதிர்கொள்ளவும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தமிழ்நாட்டில் இருந்து பாஜக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.
தமிழ்நாட்டிலிருந்து யாருக்கெல்லாம் குடியரசு தலைவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது?
என் கணக்குப் படி தமிழ்நாட்டிலிருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இசைஞானி இளையராஜா ஆகிய மூவருக்கு வாய்ப்புகள் அதிகம்.
1) பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தால், 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வன்னியர் வாக்கு வங்கி பாஜக கூட்டணி வெற்றிக்கு ஏதுவாக இருக்கும். 10.5% இட ஒதுக்கீட்டை உறுதிசெய்வதற்கான முன்னெடுப்புகளை விரைவுபடுத்த வாய்ப்பிருக்கும்.
‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மருத்துவர் இராமதாஸ் குடியரசுத் தலைவரானால் ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அது பாஜக கூட்டணிக்கு எதிர் பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கின்றன. அதனால், மருத்துவர் இராமதாஸ் அவர்களை குடியரசு வேட்பாளராக அறிவிக்க சிறிது தயக்கம் காட்டலாம்.
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜனை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தால், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண் குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறோம் என 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரையில் முதன்மை கருத்தாக வைத்து பரப்புரை செய்ய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், ஏற்கனவே தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் ‘நீட்’ ஆதரவு மற்றும் இட ஒதுக்கீடு குறித்தான பார்வையில் வேறு வகையான கருத்துகளை கொண்டிருப்பதால், பாஜக கூட்டணிக்கு எதிர் பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். தமிழிசை சவுந்தரராஜன் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இசைஞானி இளையராஜா பொதுவானவர், எந்தக்கட்சியும் சாராதவர், எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர் என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிக்கலாம்.
ஏற்கெனவே, பொது மனிதராக அறியப்பட்ட மற்றும் எல்லோராலும் மதிக்கப்பட்ட ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக கொண்டு வந்தது பாஜக, அதே போல் இசைஞானி இளையராஜா அவர்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவராக அறிவிக்கலாம்.
அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தப் போது, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியிருக்கிறோம் எனப் பெருமையுடன் சொன்ன பாஜக, இரண்டாவது முறையாக தலித் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறோம் எனச் சொல்ல அதிக வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இதனால், இந்தியா முழுவதும் உள்ள தலித் வாக்குகளை தற்போது பெற்றதை விட கூடுதலாக தேசிய ஜனநாயகக் கூட்டணி பெறலாம்.
அண்மையில் அம்பேத்கரும் மோடியும் என்ற நூலிற்கு முன்னுரை எழுதிய இளையராஜா, அதனையொட்டி இணையத்தில் வந்த எதிர் கருத்துகளுக்கு தனது தம்பி கங்கை அமரன் மூலம் பதிலளித்தார். தனக்கு பதவி ஆசை இல்லை என்றும், தான் எந்தக் கட்சியையும் சாராதவர் என்றும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்ட அறிக்கையில், இசைஞானி இளையராஜாவிற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவருக்கே தமிழ்நாட்டில் ஒரு கட்சிக் கூட்டணிக்கு எதிராக கருத்துச் சொல்ல உரிமை இல்லையா? ஆளுங்கட்சிக்கு ஆதரவான குழுக்கள், அவர் மனதில் பட்ட கருத்துகளைச் சொன்னதற்காக சொற்களால் அவரை காயப்படுத்துவதோடு அவமானப்படுத்துகிறார்கள். இது தான் ஜனநாயகமா? ஒருவருக்கு மாறுபட்ட கருத்துகளுடன் மகிழச்சியாக ஒன்றாய் இருக்கலாமே, ஏன் அவமானப்படுத்த வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம், நாடளவில் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி கூட்டணி கட்சிக்கு வேண்டியப்பட்ட குழுக்கள் தான் இசைஞானி இளையராஜாவை விமர்சித்தது போல் கருத்துருவாக்கம் செய்திருக்கிறது ஜே.பி.நட்டாவின் அறிக்கை. இந்தப் போக்கும் பாஜகவுக்கு இந்திய அளவில் கைகொடுக்கும் என்பதால் இசைஞானி இளையராஜாவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பளாராக அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு இசைஞானி இளையராஜா ஒப்புதல் தெரிவித்தால், அது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவரை முன்மொழியும் வாய்ப்பினைத் தடுத்து நிறுத்தும். ஏனெனில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் மீது அளவுகடந்த மரியாதை உண்டு.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை, ஊடகவியலாளர்
(கட்டுரையில் இடம்பெற்றிருப்பவை அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துக்களே ஆகும்)










