இசைஞானி இளையராஜா vs இசை விஞ்ஞானி யுவன்!

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான இளையராஜா,‘பிரதமர் மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப் படுவார்’என குறிப்பிட்டுள்ளது தான் இந்த வார சர்ச்சை! இசை எங்கிருந்து வருகிறது என கேட்டால் ராஜா சாரின் ஆர்மோனிய பெட்டியில் இருந்து…

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான இளையராஜா,‘பிரதமர் மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப் படுவார்’என குறிப்பிட்டுள்ளது தான் இந்த வார சர்ச்சை!

இசை எங்கிருந்து வருகிறது என கேட்டால் ராஜா சாரின் ஆர்மோனிய பெட்டியில் இருந்து தான் வருகிறது என சற்றும் யோசிக்காமல் சொல்வார்கள் தமிழர்கள். அவரின் இசைஞானம் மற்றும் இசைப்பணி குறித்து ஆண்டாண்டு காலமாக போற்றிப்பாடி வருகிறோம். இன்னும் நூற்றாண்டுகளுக்கும் அப்புகழ் தொடரும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனால், இசையை தாண்டிய ராஜாவின் செயல்பாடுகளும், பேச்சுக்களும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதது.

ஒவ்வொரு முறை இளையராஜாவின் பேச்சுக்கள் சர்ச்சையாகும் போதும், ‘புலிக்கேசி படத்தில் வரும் ஜாதி சண்டை மைதானம் போல் இணையமே போர்க்களமாக மாறிவிடும். இளையராஜாவின் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என அனைவரும் கோதாவில் இறங்கி கதகளி ஆட தொடங்கிவிடுவார்கள். இளையராஜாவின் ஆதரவாளர்கள் இரண்டு வகைப்படுவர்; இளையராஜாவின் வெறித்தனமான ஆதரவாளர்கள், இளையராஜாவின் இசைக்கு மட்டுமே ஆதரவாளர்கள்.

இளையராஜாவின் இசைக்கு மட்டுமே ஆதரவாளர்கள், அம்பி போல் அவரின் இசையை ரசித்துக்கொண்டே இருப்பார்கள். தங்களின் கொள்கைகளுக்கு எதிராக கடுகளவு அவர் கருத்துக்களை தெரிவித்தாலும், அந்நியனாக மாறி அவரை விமர்சிக்கவும் தவறமாட்டார்கள்.

இளையராஜாவின் வெறித்தனமான ஆதரவாளர்களுக்கு, ராஜா என்ன சொல்கிறாரோ அதுதான் வேத வாக்கு. மேடைகளில் ரசிகர்களை ‘கடுகடுவென’ எதாவது பேசி சர்ச்சையானால் கூட, “அவரோட இசையாலதான நாம வாழறோம், நம்மல திட்ட அவருக்கு உரிமையில்லையா? நீங்க திட்டுங்க சார்! எனக்கூறி ஏசுநாதர் போல் மறு ‘காதை’ காண்பிக்கும் அசாத்திய திறமை மிக்கவர்கள். அந்த வகையில் இளையராஜாவே கூட இளையராஜாவின் வெறித்தனமான ஆதரவாளர்கள் பட்டியிலில் தான் வருவார். மேடை ஒன்றில், ‘என்னுடைய இசையால் தானே நீங்கள் வாழ்கிறீர்கள்!’என்று முழக்கமிட்டதே அதற்கு சாட்சி.

இந்நிலையில் ‘மோடியைக் கண்டு அம்பேத்கர் பெருமை கொள்வார்’எனும் ராஜாவின் பாராட்டை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் வெறித்தனமான ரசிகர்களே பலர், ‘தலைவரே!!, தலைவரே, தலைவரே, தலைவரே, தலைவரே அப்படிலாம் சொல்லாதீங்க தலைவரே’ என உணர்ச்சிவசப்பட தொடங்கினர்.

இவர்களே இப்படி என்றால் இளையராஜாவின் எதிர்ப்பாளர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. மோடி எதிர்ப்பு எனும் புள்ளியில் ஒன்றிணைந்த இவர்கள், நம்மை பல இரவுகளில் தூங்க வைத்த ராஜா சார் என்றும் பாராமல், கடந்த 2 நாட்களாக அவரே நிம்மதியாக தூங்கமுடியாத அளவு கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். அவருக்கு எதிராக தேசிய அளவில் வன்மத்துடன் ஹாஷ் டேக்-களையும் போட்டு ட்ரெண்ட் செய்தனர். அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் வர்ணாசிரமத்தை எதிர்த்து போராடினார் எனவும், பிரதமர் மோடியோ சனாதனத்தை காக்க போராடி வருவதாகவும், எனவே இருவரையும் ஒப்பிட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது எனவும் அவர்கள் கூறிவருகின்றனர். மேலும், இளையராஜா அவரின் கருத்துக்கு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க தொடங்கின.

இந்நிலையில் பிரதமர் மோடி ஆதரவு ராஜா ரசிகர்களோ, ‘சபாஷ் ராஜா சார் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.. வருக, வாழ்த்துக்கள்.’ எனக்கூறி ஃபயர் விட்டு வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக ராஜாவின் பாடல்களை ‘லூப்’ மோடில் போட்டு கொண்டாடிவருகின்றனர்.

இன்னொரு பக்கம் மோடி எதிப்பு இளையராஜா ஆதரவாளர்களோ,‘நமக்கு ஒரு கஷ்டம்னா ராஜா சார் பாட்ட கேட்டு மனச தேத்திக்குவோம். ஆனா ராஜா சாராலையே இப்ப கஷ்டம் வந்துருக்கே!! இனி நாம எங்க போறது!’ என புலம்பத் தொடங்கினர். இருப்பினும் அவரது, ‘வட்டு கருப்பட்டிய, வாசமுள்ள ரோசாவ, கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.. கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.. அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல..!” என்ற வரிகளைக் கொண்ட ராஜா சாரின் பாடலை கொண்டே மனதிற்கு மருத்திட்டு கொண்டிருந்தனர்.

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பாஜகவை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே அவரின் குறுக்கீட்டால் இதெல்லாம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. கங்கை அமரனின் பல்வேறு பாடல்களும் இளையராஜாவின் கணக்கில் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெங்கட் பிரபுவே கூட ட்விட்டரில் ஆதங்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் கங்கை அமரனின் பாஜக ஆதரவு கருத்துக்கள் தற்போது இளையராஜாவின் பெயரில் எழுதப்பட்டு விட்டதோ!! என்று கூட இணையத்தில் நக்கல் அடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், “மோடி – அம்பேத்கர் ஒப்பீடு தொடர்பாக நான் இளையராஜாவிடம் பேசினேன். என்னுடைய கருத்தை நான் கூறினேன். அதுதொடர்பாக வரும் விமர்சனங்களை ஏற்றுக்கொகிறேன். என்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது. என்னை பொறுத்தவரை மோடி எப்படிப்பட்டவர் என்பதைத் தான் கூறியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும்..அவ்வளவுதான்” என்று இளையராஜா கூறியதாக கங்கை அமரன் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக சோக பாடல்களை ப்ளே செய்ய போன, பிரதமர் மோடி எதிர்ப்பு இளையராஜா ரசிகர்களுக்கு, ‘எங்க ஏரியா உள்ள வராதே’ பாடலை கேட்டது போல் ஒரு ஜாலி மோடுக்கு மாற்றியுள்ளார் யுவன். yes தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை தட்டி விட்டார் இசை விஞ்ஞானி யுவன் சங்கர் ராஜா!. கருப்பு நிற உடையுடன் Dark dravidian (கருப்பு திராவிடன்), proud tamizhan (பெருமை மிக்க தமிழன்) என்ற தலைப்புடன் அப்படத்தை பகிர்ந்துள்ளார் யுவன்.

உடனே மோடி எதிர்ப்பாளர்களும் , திராவிட ஆதரவாளர்களும் அந்த இரண்டு ஹாஷ்டேக்-களையும் தொக்காக தூக்கினர். தாங்கள் கருப்பு ஆடைகளில் எடுத்த பழைய புகைப்படங்களை gallery-யில் இருந்து தோண்டியெடுத்து #DarkDravidian #ProudTamizhan என்ற hashtag-களை வைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யுவனுக்கென்று வெறித்தனமான ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் -அஜித் போல் இசையமைப்பாளர்களிலும் ஒரு மாஸ் ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்தியவர் யுவன். ரஹ்மான், ஹாரிஸ் , அனிருத், உள்ளிட்டோர் இருக்கும் மேடையில் யுவனின் எண்ட்ரிக்கு எழுந்த விசில்களும், கரகோஷங்களும் அதை நமக்கு படம்பிடித்து காட்டின.

கடந்த 2020ம் ஆண்டு மத்திய அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம்’ என்று ஆயூஷ் அமைச்சக செயலாளர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதையடுத்து, ‘I am a தமிழ் பேசும் indian என்ற வாசகத்தை அடங்கிய டீசர்ட்டை டிவிட்டரில் பதிவேற்றினார் யுவன். அவரின் அருகில் இருந்த நடிகர் ஷிரிஷ், ‘இந்தி தெரியாது போடா!’ எனும் வாசகத்தைக்கொண்ட டீசர்ட்டை அணிந்திருந்தார். இதனைத்தொடர்ந்து, ‘ஓஹோ நீங்க அப்படி வர்றீங்களா’ என்ற இணையவாசிகள், அந்த இரண்டு டீசர்ட்டுமான ஆர்டர்கள் பறக்கவிட்டனர். நடிகர்கள் , அரசியல் ஆளுமைகள் என அனைவரும் அந்த டீசர்ட்டுகளை போட்டு குறிப்பிட்ட சிலரை வெறுப்பேற்றினர்.

இந்நிலையில், இளையராஜாவின் கருத்துக்கும் யுவனின் ‘இன்ஸ்டா போஸ்ட்டுக்கும்’ எந்த சம்பந்தமும் இல்லை என்று நாம் கூறுவதற்கு முன்பே, ‘சம்பந்த படுத்திக்கிட்டோம்’ என ‘கோரஸாக’ கூறிவிட்டனர் இணையவாசிகள். இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ‘யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு கூறிக்கொள்கிறோம், நானும் கருப்பு தமிழன் தான், கருப்பு திராவிடன் தான்.. அவர் கருப்புனா, நான் அண்டங்காக்கா கருப்பு’ என ஒரே போடாக போட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா கடந்த முறையாவது மோடி எதிர்ப்பாளர்களை தான் டீசர்ட் போட வைத்தார், இந்த முறை மோடி ஆதரவாளர்களையே! அதுவும் பாஜகவின் தமிழக தலைவரையே ‘நான் திராவிடன்’ எனக் கூறவைத்துவிட்டார் என இன்ஸ்டா வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நாயகன்..!!உதயமாகிறான்!!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.