நடிகர் அஜித்தின் ஜனா மற்றும் நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் பாபுராஜ். 1994ல்
பீஷ்மாச்சாரியர் என்ற படத்தில் அறிமுகமான இவர், மாயாமோகினி, ராஜமாணிக்கம்,
ஜோஜி, கூமன் உள்பட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில்
நடித்துள்ளார்.
தமிழில் ஒரு படத்தை தயாரித்துள்ள இவர், வீரமே வாகை சூடும் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப் பிரபலமான வாணி விஸ்வநாத்தின் கணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சொந்தமாக இடுக்கி மாவட்டம் கல்லாரில் ஒரு ரிசார்ட் உள்ளது. இதை
அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவருக்கு கடந்த 2020ம் ஆண்டு 40 லட்ச ரூபாய்
முன்பணமாக பெற்று, மாதம் மூன்று லட்ச ரூபாய் வாடகை என்கிற அடிப்படையில்
குத்தகைக்கு விட்டிருந்ததார்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அந்த ரிசார்ட்டை திறந்து அருண்
என்பவரால் நடத்த முடியவில்லை. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு
அந்த ரிசார்ட்டை திறக்க முயன்றபோது அது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட
ரிசார்ட் என்பதும், இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்த பிரச்சனைகளை தீர்த்து தான் ரிசார்ட்டை திறந்து நடத்த ஆவண
செய்யுமாறு அருண் அதனை குத்தகைக்கு விட்ட பாபுராஜிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் பாபுராஜ் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. அருண் தனது பணத்தை திருப்பி கேட்ட போதும் பாபுராஜ் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு பாபுராஜ் மீது அடிமாலி காவல் நிலையத்தில் அருண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் பாபுராஜ் வழக்கும் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் பேரில் அடிமாலி காவல் நிலையத்தில் ஆஜராகி
தொடர்ந்து கையெழுத்துட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்த போது காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.கேரளத் திரை உலகில் முன்னணி வில்லன் நடிகரான
பாபுராஜ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
– யாழன்







