மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது : “டெல்டா மாவட்டங்களில்…

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது : “டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் உளுந்து உள்ளிட்ட ஊடுபயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசம் அடைந்துள்ளது.

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமடைந்தது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

அது மட்டுமின்றி, நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகளும் உரிய பாதுகாப்புகள் இல்லாததால் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. நகைகளை அடமானம் வைத்தும் வங்கி கடன்களை வாங்கியும் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தாமதமின்றி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்”. இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.