பொன்னமராவதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில், 7 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கரகம் எடுப்பு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி கடந்த 4ம்தேதி காப்புக் கட்டப்பட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து எட்டாம் நாளான இன்று காலை பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அதையடுத்து கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் மலையாண்டி கோயில் மகர நோன்பு பொட்டல் என்னும் இடத்திலிருந்து விரதம் இருந்த பக்தர்கள் உடல் முழுவதும் சந்தனம் பூசி கத்தி போட்டு அம்மனை அழைத்தனர். பின்னா் சௌடாம்பிகை அம்மனுக்கு கரகம் எடுத்து ஆடும் கரகமாடி தியாகராஜன், கரகத்தை தலையில் சுமந்து வலையபட்டி மகர நோன்பு பொட்டலில் இருந்து கிளம்பி ஊர்வலமாக புதுப்பட்டி, நகைக்கடை பஜார் அண்ணா சாலை , பேருந்து நிலையம் வழியாக நாட்டுக்கள் அம்மன் சன்னதி, வீதி வழியாக சௌடாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று கரகம் எடுப்பு நிறைவு பெற்றது.
அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் , அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
—ரூபி.காமராஜ்







