நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிறைவு விழா..!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் இன்று…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் சார்பில் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் மாதம் முழுவதும் பாலின சமத்துவ மாதமாக கடைபிடிக்க நியூஸ் 7 தமிழ் முடிவு செய்தது. இதற்காக பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்பு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேலும், சாதனை படைத்த சாமானிய பெண்களை கண்டறிந்து மாதம் முழுவதும் செய்தித் தொகுப்புகளும் ஒளிபரப்பப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றதுடன் கையெழுத்து இயக்கத்திலும் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா, நியூஸ்7 தமிழின் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு வை.சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நியூஸ் 7 தமிழின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், கடந்தாண்டு மகளிர் தினத்தில் நியூஸ் 7 தமிழில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நியூஸ் 7 தமிழின் மேலாண்மை இயக்குநர் வை. சுப்பிரமணியன், பெண்களுக்கு எதிராக இருக்கும் தடைகளை தாண்டி பாலின சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், பாலின சமத்துவத்தை முன்னெடுத்து வரும் நியூஸ் 7 தமிழுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து கொண்டார். இன்னும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டிற்காக நாடாளுமன்றத்தில் போராட வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய தமிழ்நாடு ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை நல்ல முறையில் பயன்படுத்தி, அடுத்த நிலைக்கு முன்னேற முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.