புதுச்சேரியில் ஜூன் 21 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, ஹோட்டல்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நூறு சதவீத ஊழியர்கள் பணிக்கு வரலாம் உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது, மதுக்கடை உட்பட அனைத்து கடைகளையும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், பேருந்து, ஆட்டோ, டாக்சிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அவை நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன்(ஜூன்-14 ) முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூன்-21 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ஏற்கனவே உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் 50 சதவீத இருக்கைகளை கொண்டு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கும், சுற்றுலா வகை அனுமதி பெற்ற உணவகங்களுடன் கூடிய மதுபான விடுதிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நூறு சதவீத ஊழியர்கள் பணிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டதை அலுவலகங்களும், நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்த்ரவிடப்பட்டுள்ளது.







