டாஸ்மாக் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதித்தது. அதன்படி, டாஸ்மாக் கடைகள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நேற்று காலை முதலே பல்வேறு இடங்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது.
மது அருந்துவோர் தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்தபடி மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். முகக்கவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு கட்டாயம் மது வழங்கக் கூடாது என்பதுடன், ஒரே நபருக்கு அதிகளவில் மதுபானங்களை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியதால், மதுக்கடைகளில் கொரோனா விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் 250 கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வந்தவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்பட்டது. முன்னதாக மதுக்கடைக்கு சூடம் ஏற்றியும் பூக்கள் தூவியும் வணங்கி கடை ஊழியர்கள் கடையை திறந்தனர். இதேபோன்று வந்தவாசி அருகே ஆரணி சாலையில் உள்ள அரசு மதுபான கடை திறக்கப்பட்டதும், காலை முதலே கால்கடுக்க காத்திருந்த மது குடிப்பவர்கள், மதுபாட்டில்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்டபகுதிகளில், 34 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுவாங்க திரளானோர் குவிந்தனர்.
ஸ்ரீவில்லிபுதூர் அடுத்த கூமாப்பட்டி ராமசாமியாபுரம் பகுதியில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட போவதாக தகவல் வெளியானதால், மதுக்கடை திறக்கப்படவில்லை. இதனால் மதுவாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் கடலூர் டாஸ்மாக் கடையில் மது வாங்க ஆளின்றி வெறிச்சோடியது. இதேபோன்று மேலூர் அருகே மதுக்கடைகள் திறக்கப்பட்டும் மது வாங்க யாரும் ஆர்வம் காட்டாததால் கூட்டம் இல்லாமல் மதுக்கடைகள் வெறிச்சோடின
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு ஒருபுறம் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போலி மது, கள்ளச்சதையில் மதுவிற்பனை உள்ளிட்டவை மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் உத்தரவு திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்தார்.
இத்தருணத்தில் தொற்று மேலும் இருக்க, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.







