நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், யாருக்கு யார் போட்டி என்று மக்களுக்குத் தெரியும் என ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
திமுக அரசு வீட்டுவரி உள்ளிட்ட பல வரிகளுக்கு பாக்கி வைத்திருந்தால் அதற்கு வட்டி வசூலிக்கிற அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ,ஒழுங்கு சீர்கெட்டு கிடைக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், மின்கட்டணம் என்கிற சுமையை இந்த அரசு மக்கள் மீது சுமத்தியுள்ளது. கிட்டத்தட்ட 12 முதல் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு தொழி புரிவோர் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள பிரச்னைகளை சமூக வலைதள பக்கங்களில் எடுத்துக்கூறினால், தமிழ்நாடு அரசு சர்வாதிகாரமாக கைது செய்கிறது. குறிப்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதுதான் இந்த அரசின் வாடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் ஒரு காலத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாக அரசாங்கம் குளறுபடியாகதான் உள்ளது. அதனால் காவல் துறையும் குளறுபடியாகத்தான் உள்ளது. தலைமை சரி இல்லாததால் நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு நடந்தவண்ணம் உள்ளது. பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். அதனால் பல குளறுபடிகள் தமிழ்நாட்டில் நிலவுகிறது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என்று அண்ணாமலை கூறுவது தொடர்பாக அவர்தான் பதில் சொல்ல வேண்டும். மக்களிடம் கேட்டால் சொல்வார்கள், யார் யாருக்கு எதிரி என்று மக்கள் சொல்வார்கள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சி. 30 ஆண்டுகள் தமிழ்நாட்டில் பல நன்மைகளை செய்து மக்களிடையே வரவேற்பை பெற்ற கட்சி. ஆதலால் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு பேசுவார்கள் அதற்கெல்லாம் நாங்கள் ஒன்னும் செய்ய முடியாது.
உதயநிதி ஸ்டாலின் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும் போது அதற்கு விடிவு காலம் கிடைக்கும். பாஜக மேலிட பொறுப்பாளர்கள் எங்களிடம் பேசவில்லை. ஏற்கனவே தெளிவான முடிவெடுத்து அதிமுக அறிவித்துவிட்டது. பத்திரிகை, ஊடக நண்பர்கள் தான் நாள்தோறும் எதாவது கூறியவண்ணம் உள்ளனர். தினம் விவாதிக்கின்றனர். இன்று ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை கைது செய்கின்றனர். அது தொடர்பாக விவாதம் ஏதும் நடக்கிறதா? இந்த அரசு பற்றி ஏன் ஒரு விவாதமும் நடத்தப்படவில்லை. நடக்கும் தவறுகளை ஊடகத்துறையினர் நடுநிலையோடு சுட்டிக்காட்ட வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏகமனதாக முடிவெடுத்து ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுவிட்டது. பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எங்களது நோக்கம் தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்க வேண்டும், சிறுபான்மையினர் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு எதிர்கட்சித்தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.







