பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்து, தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தென் தமிழக மக்களின் தாகம் தீர்த்த பென்னி குயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய அவர், முல்லைப்பெரியாறு அணைய கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக்க்கிற்கு லண்டனில் அமைக்கப்பட்ட மார்பளவு சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சிலை சேதமடைந்திருப்பதாகவும் , தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை அவமானப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

சிலை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் பீர்ஒளி என்பவர் தனது பேட்டியில் தமிழ்நாடு அரசாங்கம் தங்களையும், கர்னல் ஜான் பென்னி குயிக் அவர்களது குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு லண்டன் மாநகரில் உள்ள கேம்பர்லி பார்க்கில் மார்பளவு சிலை வைக்க வேண்டும் என்றும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டார்கள் . அதற்காக அட்லாண்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு தொடர்பு கொண்டு ரூ.26 லட்சம் பணத்தை வழங்கியதாகவும், ரூ.92 லட்சம் மொத்தம் செலவானதாகவும், ரூ.20 லட்சம் கர்னல் ஜான் பென்னி குயிக் குடும்பத்தினர் வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ. 46 இலட்சம் தொகையினை அட்லாண்ட்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்காத காரணத்தினால் அந்நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் லண்டன் மாநகர கவுன்சில் சிலையை அகற்றப்படும் என்றும், தற்போது கருப்புத் துணியால் மூடி சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிலையின் உண்மை நிலை என்ன என்றும், மூடிய சிலையினை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்திருந்தால் உடனடியாக அந்த சிலையினை சரிசெய்ய வேண்டுமென்றும், தொடர்ந்து சிலை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, விளக்கமளித்து பேசிய, அவை முன்னவர் துரைமுருகன், விவரங்களை அறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து அவையில் தெரிவிப்பதாகக் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.